இளங்காற்று வீசுதே !
கடந்த ஒரு வாரமாக இளமையின் தொடக்கப்புள்ளிக்கு வித்திடும் கல்லூரி பருவத்தின் கதை பல கோணங்களில் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது அதிகப்படுத்திய கல்லூரிக் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தும் மாணவர் போராட்டம், மதம் பதம்பார்த்த மாணவி தற்கொலை என்று சமூகத்தின் அவலம் ஒரு பக்கமும், மறுபக்கத்தில் மாணவர்கள் போதைக்கு அடிமை, ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர், ஓடும் பேருந்தில் அரிவாள் காட்டும் மாணவர்கள் என்று வழிமாறிப் போகும் மற்றொரு இளைஞர்கள் கூட்டம். இப்படி சொல்லக்கூடிய பக்கங்கள் எத்தனையோ இருந்தாலும் சொல்லிவிடாத இளமையின் மற்றொரு பக்கம் உள்ளது. ஆம், இளமை போர்க்குணம் மிக்கது. போராட்டம் மிகுந்தது. வலியும், வேதனையும் ஒருசேரக் கலந்தாலும் உழைப்பும், விவேகமும் அதனை முறியடித்து முன்னே செல்லும் ஆற்றல் உடையது. அப்படி இருந்தும் இளைஞர்களின் வாழ்வு எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதை பார்த்தால் வியப்பாகவும் இருக்கிறது, வேதனையாகவும் இருக்கிறது.வியப்பு என்னவென்றால் மீசை முளைக்காத வயதிலும் சரளமாய் காதல் கவிதைகள் எழுதுவது,தன்னை வளர்த்தெடுத்த பெற்றோர்களுக்காக இரவு பகல் பாராமல் உழைப...