இளங்காற்று வீசுதே !
கடந்த
ஒரு வாரமாக இளமையின் தொடக்கப்புள்ளிக்கு வித்திடும் கல்லூரி பருவத்தின் கதை பல
கோணங்களில் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது அதிகப்படுத்திய
கல்லூரிக் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தும் மாணவர் போராட்டம், மதம்
பதம்பார்த்த மாணவி தற்கொலை என்று சமூகத்தின் அவலம் ஒரு பக்கமும், மறுபக்கத்தில்
மாணவர்கள் போதைக்கு அடிமை, ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர், ஓடும் பேருந்தில்
அரிவாள் காட்டும் மாணவர்கள் என்று வழிமாறிப் போகும் மற்றொரு இளைஞர்கள் கூட்டம்.
இப்படி சொல்லக்கூடிய பக்கங்கள் எத்தனையோ
இருந்தாலும் சொல்லிவிடாத இளமையின் மற்றொரு பக்கம் உள்ளது. ஆம், இளமை போர்க்குணம்
மிக்கது. போராட்டம் மிகுந்தது. வலியும், வேதனையும் ஒருசேரக் கலந்தாலும் உழைப்பும்,
விவேகமும் அதனை முறியடித்து முன்னே செல்லும் ஆற்றல் உடையது.
அப்படி இருந்தும் இளைஞர்களின் வாழ்வு எதை
நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதை பார்த்தால் வியப்பாகவும் இருக்கிறது, வேதனையாகவும்
இருக்கிறது.வியப்பு என்னவென்றால் மீசை முளைக்காத வயதிலும் சரளமாய் காதல் கவிதைகள்
எழுதுவது,தன்னை வளர்த்தெடுத்த பெற்றோர்களுக்காக இரவு பகல் பாராமல்
உழைப்பது,பசியிருந்தும் காதலி பார்க்கவில்லையே என்று பட்டினியிருப்பது...என்று
இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
வேதனையைக் கூறுவதற்கே சங்கடமாகத்தான்
இருக்கிறது. எனினும் பேனா முனை வரை வந்துவிட்டது.எனவே அதையும் எழுதி விடுகிறேன்.
புகைபிடிப்பது உடல்நலத்திற்குகேடு என அறிந்தும் வட்டவட்டமாக இழுத்து புகைவிடுவது, மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்பதை தெரிந்தும் சந்தோசம் என்று
கூவிக்கொண்டு கும்மாளமாய் குடிப்பது, மரியாதை தெரிந்தும் அதைக்கொடுக்காமல்
அகங்காரமாய் ஒழுக்கமின்றி பேசுவது....இதுவெல்லாம் யாருக்கு தெரியாது என்று நீங்கள்
எண்ணலாம்.ஆனால் தெரிந்தும் இதை ஏன் செய்கிறோம் என்றுதான் தெரியவில்லை.
சரி அத்தகைய வியப்புக்கும் வேதனைக்கும் யார்
வித்திடுவது என்றால் பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகம் என்பதை நாம் அனைவரும்
அறிவோம்.
முதலாவதாக பெற்றோர். யார் அவர்கள்? தங்களின்
கனவை மறந்து அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தையே கனவாய் சுமக்கும் புண்ணியவாதிகள்.
இருந்தும் என்ன பயன்? ஒரு சில சமயங்களில் உங்களின் கனவுகளுக்கு எங்களால் உயிரூட்ட
முடிவதில்லை. ஆயினும் விடாப்பிடியாய் உயிரூட்டுகிறோம் எங்களின் அரும்பெரும்
கனவுகளின் விழுதுகளாய் வலம் வரும் எழுத்தாளர், ஓவியர், புகைப்படக் கலைஞர்,
பேச்சாளர், விளையாட்டு வீரர் என்று மனதுக்குள் பூட்டிவைத்து சொல்லிக்கொள்ளாத ஆசைகளுடன். எனவே அன்பான
பெற்றோர்களே உங்களின் ஆசையும் எங்களின் கனவும் உயிர்பிக்க வாழ்த்துங்கள். அதுவே
எங்களின் காலம் காட்டும் கலங்கரை விளக்காய் அமையும்.
இரண்டாவதாக ஆசிரியர். சொல்லிய சொல்லுக்கு
எதிர்க்கேள்வி கேட்கும் மாணவனை சற்றே முறைத்தாலும் உங்களின் ஆழ்மனதில் நாங்கள்
அக்கணமே பதிந்து விடுவோம் என்பதை நன்கு அறிவோம். ஒரு அறிவுசார்ந்த சமூகத்தின்
மேம்பாட்டுக்காக உழைக்கும் வர்க்கத்தை வார்த்தெடுக்கும் மதிப்புமிகு ஆசான்கள்
நீங்கள். உங்களின் வழித்தோன்றலில் எங்களின் ஞானோதையம் பிறக்கிறது.
அப்படி இல்லையென்றால் அறிவுசார்ந்த, பண்பும்
புலமையும் தன்னகத்தே பெற்ற மாபெரும் இளைஞர் கூட்டம் உருவாகி இருக்காது. இவைகளைக்
கடந்தும் இன்றும் இளமை வீணடிக்கப்படுகிறது என்றால் அங்கு சரியான வழிகாட்டி
இல்லையென்றுதான் அர்த்தம். அதனால்தான் சரியும் தவறாகிறது, தவறும் மேலும்
தவறாகிறது. எனவே தவறுக்கு முற்றுபுள்ளி வைக்க உங்களின் அருள்வாக்கை சாதி, மதம் என்னும்
பாகுபாடின்றி அனைவருக்கும் உபதேசியுங்கள். மறவாமல் மதிப்பெண் மட்டுமே உன்னை
எதிர்காலத்தில் அடையாளம் காட்டாது என்பதை மாணவர்களிடம் சொல்லி அவர்களின்
மதிப்புமிக்க எதிர்காலத்திற்கு விதை போடுங்கள். ஏனென்றால் உங்களின் வீச்சு
எங்களின் வழித்தடம்.
மூன்றவாதாக சமூகம். யாரைச் சொல்வது, எதற்காக
சொல்லலாம், எப்படி சொல்லலாம் என்பதை
கூறுபோட்டு விற்கப்படும் ஒரு பாரம்பரிய நாகரீக இடம். காரணம் ஏதும் அறியா குருட்டு
மனப்பான்மை. முதியவர் சாலையைக் கடக்க ஓடிப்போய் மனமுவந்து உதவும் வாலிபனையும்
பார்த்துள்ளேன், அதே சாலையில் ஒரு பெண்ணிடம் நகையை பறித்துச் செல்லும் வாலிபனையும்
கண்டுள்ளேன். இருவருமே இளைஞர் என்னும் வர்க்கம் தான். ஒரே சமுதாயத்தில்
வளர்ந்தவர்கள் தான். ஆயினும் பண்பும், சூழ்நிலையும் அவர்களை வேறுபடுத்தியது,
சமூகம் ஒரு சாரரை காயப்படுத்தியது மறவாமல் திருடன் என்னும் பட்டத்துடன். கொடுங்கள்
திருடன் என்னும் பட்டத்தை கணப்பொழுதில். ஆனால் நீங்களோ அவனை காலம் முழுவதுமே
சுமக்க வைக்கிறீர்கள்.
இவ்விடத்தில் ஒரு மிகச் சிறந்த உதாரணத்தைக்
கூறுகிறேன். அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத்தலைவராய் இருந்தபோது தூக்கு தண்டனை
பெற்ற குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்களின் மீது முடிவு எடுக்காமல்
இருந்தமைக்கு அவர் கூறிய பதில் ‘அவர்கள்
சூழ்நிலைக் கைதிகள் என்றும், சூழ்நிலையே ஒருவரை தடம் மாறச் செய்கிறது என்று கூறி
இதற்கு தூக்கு தண்டனை தீர்வாகாது என்று விளக்கம் கூறினார். எனவே சூழ்நிலையே ஒருவரை
ஆட்டிப்படைக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இச்சமூகம் உள்ளது.
அதை நாம் மறுத்துவிடவும் முடியாது.
அதேபோல் சூழ்நிலை மட்டுமின்றி நம் சமூகத்தை
பொருத்தவரையில் ஆணும் பெண்ணும் சிரித்து பழகினால் ஒரு தவறான புரிதல் பலரிடமும்
ஏற்படுகிறது. அது முற்றிலும் தவறானது. மேலும் தந்தை குடிகாரராகவோ அல்லது
திருடராகவோ இருந்தால் மகனும் அப்படியே என்று எண்ணுவதை முதலில் கைவிட வேண்டும்.
ஏனென்றால் ஒரு நல்ல சமூகத்தின் ஆகச்சிறந்த கடமையை நிறைவேற்ற வேண்டுமாயின் ஊர்கூடி
தேர் இழுத்தால் மட்டுமே முடியும். அப்படி ஊர்கூடி தேர் இழுத்த பயனால்தான் பல
இடங்களில் ‘இளமையில் வறுமை’ என்னும் நிலை மாறி ‘இளமையில் கல்’ என்பதை நனவாக்க
முடிந்தது. அதற்கு காரணம் வழிகோலிய சமூகத்தின் உதவும் கரங்கள்.
இறுதியாக இளைஞர் கூட்டத்திற்கு ஒரு அறைகூவல்.
என்றென்றும் உங்களின் போர்குணத்திற்கு
சாட்சிப்பத்திரமாக கட்டியம் கூறும் வரலாறு உண்டு. எனவே அரசியல் பேசுங்கள்.அதனை
நாகரீகமாய் கையாளுங்கள்.ஏன் நாளைய தலைவர் உங்களில் ஒருவராகக் கூட இருக்கலாம். தவறை தட்டி
கேழுங்கள், அதனை மட்டும் என்றும் தட்டிக் கழித்து விடாதீர்கள். அறிவார்ந்த உலகம்,
அறிவார்ந்த மனிதர்கள். ஆகவே இளைஞர்களே உங்களை நீங்களே செம்மைப்படுத்துங்கள்,
சமுதாயத்தில் அடையாளப்படுத்துங்கள். இறுதியாக தோழமையை நேசியுங்கள், பாராட்டுங்கள்,
ஊக்கப்படுத்துங்கள், கொண்டாடுங்கள் என்றும் இளமை மாறாத இளமையுடன்.
கட்டுரையாளர்: ‘அறம் வளர்க்கும் மாணவர்’
Comments